செவ்வாய், 19 அக்டோபர், 2010

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்

ஓம் சக்தி!
"தொண்டு செய்; தொடர்ந்து செய்; தொய்வில்லாமல் செய்!"-அன்னையின் அருள்வாக்கு

இருமுடியின் மகிமை
ஓம் சக்தி!


வணக்கம்!

எல்லாம் வல்ல அன்னை ஆதிபராசக்தி அடிகளாராகிய மானிட வடிவம் தாங்கி அவதார நோக்கத்தோடு அருள்வாக்களித்து, மக்கள் குறை தீர்த்து அற்புதங்கள் பல நிகழ்த்தி வருகின்ற புண்ணியத்தலம் மேல்மருவத்தூர். இத்தளத்தில் 21 சித்தர்கள் ஜீவசமாதியாக உறைகின்றனர்.


இன்றைய கலியுக கேடுகளை நீக்கி, மக்கள் மனதில் ஆன்மீக உணர்வுகளை ஊட்டி, பெண்களையும், அடி தலத்து மக்களையும் அவ்வழியில் உயர்வு படுத்த அவதரித்த அன்னை கூறிய அருள்வழிகளில் இருமுடி விரதமும் ஒன்று.



இருமுடி பற்றிய அன்னையின் அருள்வாக்கு:


"அன்னையை மனமுருக நினைத்து தன் குறைகளுக்காக வேண்டி சக்தி மாலை அணிந்து முறைப்படி விரதமிருந்து மேல்மருவத்தூர் ஆலயம் வலம் வந்து அன்னையை சரணடைந்தால் நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும்."

"நான் கூறும் விதிமுறைப்படி உண்மையாக விரதமிருந்து இருமுடி ஏந்தி வரும் சக்திகளை அழிவிலிருந்து காப்பாற்றுவேன்."

"இருமுடி அணிந்தால் உங்களுக்கெதிரான மாந்திரிகம் அழியும்."

"ஐம்புலன்களை அடக்கத்தான் விரதம். விரதம் இருந்தால்தான் நோய்வராது. உடலில் சேர்கிற அழுக்கைக் குளித்துப் போக்கிக் கொள்வது போல, துருபிடித்த பொருட்களை எண்ணெய் கொண்டு சுத்தப்படுத்துவது போல, உள்ளத்தில் ஏற்படும் அழுக்குகளை நீக்கி கொண்டு தூய்மையாக வாழ்வதற்கு விரதங்கள் உதவும்."

"ஒழுக்கமில்லாமல், கட்டுப்பாடின்றி நீ கொண்டு வந்து செலுத்தும் இருமுடியினால் பயன் என்ன? விரதமிருந்து கட்டுப்பாட்டை மேற்கொண்டு இருமுடி ஏந்தி வருகின்ற சிலருக்குக் காட்சி கொடுப்பேன். அந்தக் காட்சி பெற்றவர்களுக்கு மறுபிறவி இல்லை."

"தொடர்ந்து இருமுடி செலுத்து! ஒன்பது மாலை போதும்! பத்து மாலை போதும்! என்று நிறுத்திக் கொள்ளாதே! நீ செலுத்தும் ஒவ்வொரு இருமுடிக்கும் கட்டாயம் பலன் உண்டு."

"எங்கெங்கே அதிக அளவில் சக்தி மாலை அணிந்து இங்கு வந்து இருமுடி செலுத்துகிறார்களோ அங்கே அழிவுகள் அதிகம் இருக்காது."


ஆதிபராசக்தி சித்தர் பீடம்:

சித்தர் பீடத்தில் தோன்றிய சுயம்பு 2000 ஆண்டுகால வரலாறு கொண்டது. மச்சபுரான கூற்றுப்படி அம்பிகையின் அபிமான தளங்களில் ஒன்றாக சித்தவனம் உள்ளது. இங்கு மாதா என்னும் திருநாமத்துடன் வீற்றிருப்பதாக தேவி கூறுவதாக புராணத்தில் உள்ளது. சித்தவனம் தான் தற்போது மேல்மருவத்தூராக உள்ளது. மேலும் ௨௧ சித்தர்களின் ஜீவசமாதி அமைந்த தலமாகவும் உள்ளது.

சித்தர் பீட அமைப்பு:


சித்தர்பீடம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவாயிலில் அன்னையின் சூலம் நிறுவப்பட்ட ஓம் சக்தி மேடை அமைந்துள்ளது. அன்னையே நவக்கிரகங்களுக்கும் நாயகியாக இருப்பதால் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. இதற்கு மாற்றாக ஓம்சக்தி மேடை அமைந்துள்ளது. மேடையை அடுத்து நான்குகால், எட்டுகால் மண்டபங்கள் உள்ளன.

எட்டுகால் அஷ்டலட்சுமிகள் அருள்புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றன. இவைகளுக்கு பின் கருவறை அமைந்துள்ளது. மண்டபத்தின் மேல் முகப்பில் சித்தர்களின் சுதை சிற்பங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு வடக்கில் தல விருட்சமான வேப்பமரம் உள்ளது.


அன்னையின் திருக்கோலம்:


அன்னை ஆதிபராசக்தி தாமரை பீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். வலது கையில் தாமரை மொட்டை ஏந்தியும், இடது கையில் சின் முத்திரையை தாங்கியும் காட்சி அளிக்கிறாள்.

வலது காலை மடக்கி இடது காலை ஊன்றிக் கொண்டிருக்கிறாள். அனைத்திலும் முதன்மை தத்துவம் கொண்டவள் என்பதை உணர்த்தவே இடது காலை ஊன்றியிருக்கிறாள்.

அன்னையின் கூந்தல் மேற்புறமாக தூக்கி முடிந்து ஞானவடிவாக உள்ளது. அன்னையின் முன்பாக சுயம்பு வடிவம் உள்ளது.

அன்னையின் பரிவார தேவதைகளாக ஏழு கன்னியர் புற்று மண்டபம் அருகே உருவ திருமேனியோடு எழுந்தருளி அருள்புரிகின்றனர். புற்று மண்டபத்தின் பின்புறம் நாகபீடம் அமைந்துள்ளது. இதில் எலுமிச்சம்பழம் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்பது அன்னையின் அருளாணை.

காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி ஆகியோரை வழிபடுவதால் கிடைக்கும் பலனை நாகபீட வழிபாட்டில் பெறலாம். சித்தர் பீடத்தின் எதிரே அதர்வண பத்ரகாளி என அழைக்கப்படும் பிரத்தியங்கராதேவியின் சன்னதி அமைந்துள்ளது. தமிழகத்தில் இங்கு தான் முதலில் பிரத்தியங்கராதேவிக்கு சன்னதி அமைக்கப்பட்டது. ஏவல், பில்லி, சூன்யத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டு குணமடையலாம்.

இங்கு அனைத்து மதத்தினரும் வழிபடலாம். தீட்சை பெற்ற அர்ச்சகர்களே கருவறையில் பூஜை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.

பக்தியுணர்வோடு ஆண், பெண் பேதமின்றி அனைவருமே கருவறைக்குள் அர்ச்சனை செய்யலாம். பெண்களுக்கு இங்கு முக்கியத்துவம் அளிப்பது குறிப்பிட தக்கது.

வழிபாடு மற்றும் விழாக்கள்


அன்னை அருளுடன் அவள் உரு ஏற்றிகொடுத்துள்ள 108, 1008 தமிழ் மந்திரங்கள் மூலமே அர்ச்சனை, அபிஷேகம், வேள்வி பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது.

சித்ரா பௌர்ணமி, ஆடிப்பூரம், அடிகளார் அவதாரத் திருநாள், நவராத்திரி, தைப்பூசம், தமிழ், தெலுங்கு, ஆங்கில வருடப்பிறப்பு மற்றும் மாதம் தோறும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு விழாவும் ஒவ்வொரு மாவட்ட தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது.

தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் இரு மாதங்களுக்கு முன்பே சக்தி மாலை அணிந்து விரதமிருக்கின்றனர். தைப்பூச நாளில் இருமுடியுடன் சித்தர் பீடத்திருக்கு சென்று தாங்களே அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமிருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

சிறப்பு சேவைகள்


தினமும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் விழா நாட்களில் ஏழைகளுக்கு இலவச திருமணம், மருத்துவ முகாம் ஆகியவை நடத்தப்படுகிறது.


சித்தர்பீடத்தில் வழிபாடுகள் தங்கு தடையின்றி நடக்கவும், நிர்வகிக்கவும், ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ பண்பாட்டு அறநிலை செயல்படுகிறது. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளாக செயல்பட்டு கல்வி, மருத்துவம் மற்றும் பண்பாட்டு சேவைகளை செய்து வருகிறது.


மேல்மருவத்தூர் விழாவிற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இவ்வழியே செல்லும் அனைத்து ரயில்களும் விழா நாட்களில் மேல்மருவத்தூரில் நிறுத்தப்படுகிறது . ஆடிப்பூரத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக