அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருத்தணி

ன் கோவில்
முருகப் பெருமானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றான திருத்தணியின் வரலாறு பற்றி அறிந்து கொள்ளலாம்.
தல வரலாறு: திருத்தணி மலைப்பகுதியில் வசித்த வேடர்களின் தலைவனாக நம்பிராஜன் இருந்தான். ஒருமுறை காட்டுக்கு சென்ற போது, ஒரு குழந்தையை வள்ளிக்கொடியின் அடியில் கண்டான். இந்தக் குழந்தை திருமாலின் புதல்வி. சந்தர்ப்ப வசத்தால் பூமிக்கு வந்தவள். குழந்தைக்கு “வள்ளி’ என பெயர் சூட்டி வளர்த்தான். பருவம் அடைந்த வள்ளி தினைப்புனம் காத்து வந்தாள்.
அவளை ஆட்கொள்ள முருகன் முதியவர் வடிவில் வந்தார். வள்ளி மேல் காதல் கொண்டார். அவளைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டு, தன் அண்ணன் கணேசனின் உதவியை நாடினார். கணேசர் யானை வடிவெடுத்து வள்ளியைப் பயமுறுத்தினார். பயந்தோடிய வள்ளி கிழவர் முருகனை தழுவிக் கொண்டாள். அவரது திருமேனி பட்டதுமே, வந்திருப்பது முருகன் என அறிந்த வள்ளி அவருடன் இணைந்தாள்.
வள்ளியை பயமுறுத்திய விநாயகர், “ஆபத்சகாய விநாயகர்” என்று பெயர் பெற்றார். மலைப்பாதையில் விநாயகரும், வள்ளியும் அமர்ந்திருக்கும் சன்னிதி உள்ளது. திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்த முருகன், கோபம் தணிந்த இத்தலம் “திருத்தணிகை” எனப்பட்டு, திருத்தணி என சுருங்கியது.
வேல் இல்லாத வேலன்: இங்குள்ள முருகன் சிலையில் வேல் இல்லை. அலங்காரம் செய்யும் போது மட்டும் வேலை சாத்துகின்றனர். இதற்கு “சக்தி ஹஸ்தம்’ என்று பெயர்.
புஷ்பாஞ்சலி: முருகன் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் கந்தசஷ்டியின் போது சூரசம்ஹாரம் மற்ற தலங்களில் நடக்கும். அன்று முருகனை சாந்தப்படுத்த ஆயிரம் கிலோ மலர்களால் புஷ்பாஞ்சலி செய்வர்.
வாசல் பார்த்த யானை: யானை வாகனத்துடன் முருகன் காட்சி தருகிறார். இந்த யானை வெளியே பார்த்த படி இருப்பது மாறுபட்டது. முருகன் தெய்வானையை மணந்த போது, ஐராவதம் என்னும் தேவலோக யானையை இந்திரன் பரிசாகக் கொடுத்தார். இதனால், தேவலோகத்தில் வளம் குறைந்தது. இதனால் முருகன், யானையின் பார்வையை தேவ லோகம் நோக்கி திருப்பும் படி கூற, யானையும் தேவலோகம் இருக்கும் கிழக்கு நோக்கி உள்ளது.
கஜ வள்ளி: இங்குள்ள “கஜவள்ளி’ வள்ளியும், தெய்வானையும் இணைந்த அம்சமாக அருள்பாலிக்கிறாள். வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள். தங்கத்தேர் புறப்பாடு இல்லாத வெள்ளிக்கிழமைகளில், கஜவள்ளியின் கிளி வாகன பவனி நடக்கும்.
சந்தன பிரசாதம்: முருகனுக்கு இந்திரன் காணிக்கையாகக் கொடுத்த சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனமே சாத்தப்படும். இதில் சிறிதளவை நீரில் கரைத்து குடித்தால் நோய் தீரும். விழாக் காலத்தில் இந்த பிரசாதம் கிடைக்கும்.
ஆடி கார்த்திகை: முருகப்பெருமானை இந்திரன், ஆடி கார்த்திகையன்று கல்ஹார புஷ்பம் என்னும் மலரால் வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. மூன்று நாள் நடக்கும் இந்த விழாவில், அடிவாரத்திலுள்ள சரவணப்பொய்கைக்கு சுவாமி எழுந்தருள்வார். இந்த நாளில் மலர்க்காவடி எடுத்து முருகனை வழிபடுவோர் நினைத்தது நிறைவேறும்.
ஐந்தாம் படைவீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகார்த்திகையன்று தெப்பத்திருவிழா நடக்கும். இந்நாளில் மலர்க்காவடி எடுத்து வழிபட்டால் மனதில் நினைத்தது நிறைவேறும்.
அமைவிடம்: அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. இது தொண்டை நாடு என்ற பகுதியில் உள்ளது. தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம்.
திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி 63 திருப்பாடல்களை பாடினார். இத்தலம் 600 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ, சோழ மன்னர்களால் இத்தலம் போற்றப்பட்டுள்ளது என தெரிகிறது. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க அடிகள், கந்தபைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக